சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன், அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்ற 10 வருடங்களில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வாயிலாக நியமிக்கப்பட்டனர். எனினும் அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது.
மேலும் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதியானவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் நேர்முக தேர்வு நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில், இணை செயலர், கல்லூரி கல்வி இயக்குனர் உட்பட 3 பேர் கொண்ட குழு தான் அவர்களை நேர்முக தேர்வு வரவழைத்து தேர்ந்தெடுப்பார்கள். அத்துடன் நேர்முக தேர்வுக்கு வரக்கூடிய விரிவுரையாளர்களிடம் அந்த துறை சார்ந்த நீண்ட அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் கேள்விகளை கேட்பதற்கு நியமிக்கப்படுவார்கள் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக பல்கலைகளில் இந்த நேர்முக தேர்வு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பேசினார்..