தமிழகத்தில் கடந்த 2019ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பதவி உயர்வு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் சில பேர் இடமாறுதல் செய்யப்பட்டனர், பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. அத்துடன் குற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையில் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலங்கள், பணிக்காலமாக முறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவே இந்த நடவடிக்கைகளால் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே உரிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்களை, தேவைப்பட்டால் பதவி இறக்கம் செய்து, முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கையில் இடமாறுதல் வழங்கப்பட்டிருந்தால், அந்த ஆசிரியர்களுக்கு, கவுன்சிலிங் நடக்கும் தேதிக்கு முன்பு விருப்பமான பள்ளிகளில் மாறுதல் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.