தமிழக மின்வாரிய நிலையம் சூரிய சக்தி மின்நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.
தமிழக மின்வாரிய நிலையம் காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 8,606 மெகாவாட் திறனில் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளது. இதில் 17 மெகாவாட் மின்திறன் கொண்ட மின் நிலையங்கள் மட்டுமே அரசுக்கு சொந்தமானவை. மற்றவை தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாகும். தமிழகத்தில் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். இந்த காலங்களில் மின்சாரம் அதிக அளவில் கிடைக்கும். கடந்த 1990-ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் முப்பந்தல், மதுரை மாவட்டம் புலியங்குளம், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு மற்றும் முள்ளக்காடு, திருப்பூர் மாவட்டம் கோதானூர், கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மின் நிலையங்களிலிருந்து குறைந்த அளவே மின்சாரம் கிடைக்கிறது. இந்த காற்றாலைக்கு அருகில் காலியிடங்கள் உள்ளது. இந்த காலியிடங்களில் சூரிய சக்தி மின்சாரம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை முப்பந்தல், கோதனூர், கயத்தாறு, சுல்தான்பேட்டை பகுதிகளில் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த இடங்களில் மின் வழித்தடங்கள் அமைந்துள்ளதால் புதிய மின் வழித்தடங்கள் அமைக்க வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக செலவும் குறையும். இந்நிலையில் குறைந்தத்திறன் கொண்ட காற்றாலைகளுக்கு பதில் அதிகளவு திறன் கொண்ட காற்றாலைகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மின் நிலையங்களில் பகலில் சூரிய மின்சக்தியும், இரவில் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும். மேலும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.