ஜப்பானிய மூளை காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு, மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதேபோன்று தமிழகத்திலும் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் இருக்கிறது. இருந்தாலும், ஜப்பானிய மூளை காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் இல்லை என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 1020 பேர் பாக்டீரியா தொற்று காய்ச்சலாலும், 600-க்கும் மேற்பட்டோர் எலி காய்ச்சலாலும், 125 பேர் மலேரியா காய்ச்சலாலும், 77 பேர் சிக்கன் குனியாவினாலும், 2822 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து 15 பேர் ஜப்பானிய மூளை காய்ச்சலால் பாதிக்கப் பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதோடு காய்ச்சலின் தாக்கம் அதிக அளவில் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது. அதன் பிறகு கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தெரிவிப்பது போன்று, கொசுக்களால் பரவக்கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மாநில முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீர் போன்றவற்றையும் சுத்தப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலத்திற்கு பிறகு தொட்டிகள், சிரட்டைகள், உடைந்த மண் பாண்டங்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், கட்டுமான இடங்கள் மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் போன்றவற்றையும் அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.