தமிழகத்தில் ஜூலை 16ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் நாடு முழுவதும் முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசின் வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி பல்வேறு சேவைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில்தான் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மண்டலங்களுக்குள் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு மாவட்டத்திற்குள் மட்டும் போக்குவரத்து சேவையை இயக்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு முடிவெடுத்திருந்தது. இந்த முறையில் தான் தற்போது வரை போக்குவரத்து சேவை இயங்கி வருகின்றது. தபோதைய நிலையில் சென்னையில் கொரோனா குறைந்தாலும், பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது .
இதனால் பிற மாவட்டங்களுக்கும் போக்குவரத்து சேவையை இயக்குவதில் சிரமங்கள் உள்ளன என்று தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 16ம் தேதி முதல் போக்குவரத்தை இயக்குவதில் சிக்கல் உள்ளது. இம்மாத இறுதிவரை போக்குவரத்தை இயக்க வாய்ப்பில்லை. அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுங்கள் என்று வலியுறுத்தப்படுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் மாலை நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்து சேவை நிறுத்தமா ? அல்லது கட்டுப்பாடு விதிக்கப்படுமா ? என்று தெரிவிக்கப்படும் என்று கருதப்படுகின்றது. அதே நேரம் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதையும் பார்த்து தான் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று தெரிகின்றது.