தமிழகத்தில் மதுபான சில்லரை விற்பனையை டாஸ்மாக் நிர்வாகம் நடத்தி வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடுகளைப்பற்றி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இவற்றிற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட பணி நேரத்தில் மட்டுமே இயங்க வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகளின் சுற்றுப்புறம் தூய்மையாகவும், சுகாதாரமான நிலையிலும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்கவும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் அந்த ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மது பானங்களின் விலைப்பட்டியலை நுகர்வோருக்கு தெரியும் படி வைக்க வேண்டும். வெளிமாநிலங்களில் மதுபானங்கள் விற்கப்பட்டால் காவல்துறையினரின் மூலமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவற்றின் மூலமாக டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும். இதையடுத்து வழிபாட்டு தலங்கள் மற்றும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே மதுபானக் கடைகள் இருந்தால் அவற்றை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் நான் உட்பட 38 மாவட்ட செயலாளர்கள், மற்றும் அந்தந்த மாவட்ட பத்திரிக்கை செய்தியாளர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு அமைக்கப்படும். அந்தக் குழுவில் பெறப்படும் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையை இதில் பதிவு செய்யவேண்டும். மேலும் மதுபான கடை ஊழியர்கள் அனைவரும் நேர்மையாகவும், அரசுக்கு நற்பெயர் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.