தமிழகத்தில் நேற்று 5 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக விரைந்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 4 மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 87,80,222 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 5 வது மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நேற்று 32,017 கொரோனா தடுப்பூசி மையங்கள் நடைபெற்றது. அதில் சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடைபெற்றது.
இதையடுத்து முதலமைச்சர் நேற்று கிண்டி மற்றும் சின்னமலை ஆகிய தடுப்பூசி முகாம்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட வாரியாக முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு அவர்களின் விவரங்களை ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் முதல் தவணை 65% மற்றும் இரண்டாவது தவணை 22% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அவரவர் இருப்பிடத்தின் அருகிலே முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார். அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தி இலக்கை முழுமையாக அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.