சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள குடும்ப நல மையத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரம், நோய் தடுப்புத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி மையங்களில் இலவசமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போடப்படும் தவணை தடுப்பூசி துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் வாரம் தோறும் 26 தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதுவரை 36 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
அதன் பிறகு தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 95 சதவீதம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 87 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள வர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 2-ம் தவணை கொரோனா தடுப்பூசிக்கும், பூஸ்டர் தடுப்பூசிக்கும் இடையேயான கால அவகாசம் 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசியை பணம் செலுத்தி மக்கள் போட்டுக்கொள்ள விரும்பாததால், மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 30 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால், மத்திய அரசிடம் இலவச தடுப்பூசிகள் செலுத்துவது தொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு, அதற்கு அனுமதி வழங்கியதால் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 4 கோடியே 77 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். மேலும் பூஸ்டர் தடுப்பூசியானது 75 நாட்களுக்கு இலவசமாக போடப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதால், ஒரு வாரத்திற்கு ஒருமுறை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.
இந்த தடுப்பூசி முகாம் வருகிற 24-ஆம் தேதி 50,000 மையங்களில் நடத்தப்படும். இதனையடுத்து கேரளாவில் ஒருவருக்கு குரங்கமை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பன்னாட்டு விமான நிலையங்களில் ஆய்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், முதல்வர் உடல் நலம் நன்றாக இருக்கிறது எனவும், சிறுமி கருமுட்டை விவகாரம் தொடர்பாக மருத்துவமனைகளை 15 நாட்களுக்குள் மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும் கூறினார்.