தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகரிக்க தொடங்கியதால் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப் பட்டது. அதாவது, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரையிலும், கல்லுாரி மாணவர்களுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி வரையிலும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கல்லுாரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தமிழக அரசின் சார்பாக “இல்லம் தேடி கல்வி” என்ற திட்டத்தில் நேரடியாக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதற்கிடையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதில், தன்னார்வலர்களை நியமித்து அவர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக பாடங்கள் நடத்துவதாக பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ள இடங்களுக்கு அருகில் அமைந்துள்ள சமூக நலக் கூடங்கள், அங்கன்வாடிகள், பொது மண்டபங்கள், தனியார் கட்டடங்கள் ஆகியவற்றுக்கு அரசு பள்ளி மாணவர்களை வரவழைத்து நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நேரடி வகுப்பு நடத்த முடியாமல் தவிக்கும் தனியார் பள்ளிகளும் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கைகளின்படி இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு போட்டியாக, இல்லத்தில் கல்வி என்ற திட்டத்தை வகுத்துள்ளனர். அதன்படி மாணவர்களை ஆசிரியர்களின் வீடுகளுக்கு வரவைத்து அங்கு ஒவ்வொரு வகுப்புக்கும் நேரடி முறையில் வகுப்பு நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களை போன்று, தனியார் பள்ளி மாணவர்களிலும் பலர் மொபைல் போன் மற்றும் இணையதள வசதி இன்றி உள்ளதால் அவர்கள் கற்றலில் பின் தங்குவதை தடுக்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடித்து மாணவ-மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, இந்த வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சியாக பல பள்ளிகள் சார்பாக தற்போதே வீடுகளில் வகுப்புகள் தொடங்கியுள்ளன. விரைவில் அனைத்து பள்ளிகளும் இத்திட்டத்தை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.