கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப் பகுதிகள் என 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை விபத்தினால் ஏற்படும் பிரச்சனை உள்ளிடவற்றை தவிர்க்கும் நோக்கில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளூர் மக்களை வேலைக்கு வைக்காமல் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வேலை கொடுத்து வருகின்றனர். உற்பத்தி பாதிக்காமல் இருக்க தினசரி தவறாமல் அவர்கள் வேலைக்கு வரவேண்டும் என்பதற்காக தொழிற்சாலை வளாகத்தில் அல்லது அதை ஒட்டி உள்ள வாடகை கட்டிடத்தில் கூட்டமாக தங்க வைக்கப்படுகின்றனர்.
வட மாநில தொழிலாளர்களுக்கு குறைந்த அளவு ஊதியம் கொடுத்தால் போதும் அவர்கள் வேலைக்கு வந்து விடுவார்கள் என்பதால் இதுபோன்ற செய்து வருகின்றனர். தற்போது கும்மிடிப்பூண்டி பகுதியில் பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மேலும் அவர்களின் தேவை அதிகரித்து வருவதால் வடமாநில தொழிலாளர்களை மட்டும் அழைப்பு விடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி முழுவதும் இந்தி ஆங்கில மொழியின் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் தமிழர்கள் வேலை கேட்டு சென்றால் வேலை இல்லை என்று கூறும் தொழிற்சாலை நிர்வாகங்கள் வடமாநிலத்தவரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.