தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் ஜூலை 19-ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும். இந்த ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு நியமிக்கும்.
இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் டிஆர்பி நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதனையடுத்து வருகிற 15-ஆம் தேதிக்குள் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அதன் பட்டியலை 18-ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். அதன்பிறகு தற்காலிக ஆசிரியர் ஒப்புதலுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்கிய பிறகு 20-ம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர வேண்டும். இந்த தற்காலிக ஆசிரியர்கள் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு கீழ் உள்ள 24 மாவட்டங்களில் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.
மேலும் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருவதால் தற்காலிக ஆசிரியர்கள் 20-ம் தேதி பணியில் அமர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை தவிர்க்க வேண்டும் என்றால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவசர கூட்டம் நடத்தி 19-ஆம் தேதி தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாக தான் தற்காலிக ஆசிரியர்கள் பணியிழப்பு ஏற்படாமல் பணியாற்ற முடியும்.