வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 45 கணினி ஆப்பரேட்டர்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக இ.எஸ் வானுமாமலை வி.இராஜலட்சுமி 145 பேர் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள கணினி ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நியமிக்கப்பட்டு கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக கணினி இயக்குதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் ஓட்டுனர் உரிமம் அட்டை தயாரிப்பது போன்ற அலுவலக உதவி பணிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நீண்ட காலமாக பணியாற்றியவர்களின் பணி வரன்முறைபடுத்தும்படி 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை சார்பில் தமிழக அரசிடம் கருத்துக்கள் அனுப்பப்பட்டதாகவும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தங்களைப்போன்ற பணியாளர்கள் இரண்டு முறை தொடரப்பட்ட வழக்குகளில் பணிவரன்முறை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கானது நீதிபதி வி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தற்போது தமிழக அரசு தரப்பில் மனுதாரர்களை போல நியமிக்கப்பட்ட அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பணி நிரந்தரம் கோரி உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி பார்த்திபன் கடந்த 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளில் உயர்நீதிமன்றம் விரிவாக ஆராய்ந்து அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் தற்போதைய மனுதாரர்கள் 45 பேரின் பணியையும் வரன்முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகளை 8 வாரங்களில் முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி கூறியுள்ளார்.