தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் 20 செமீ அளவுக்கு அதிகமான மழை கொட்டி தீர்த்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதனால் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு அதிகமாக மழை கொட்டி தீர்த்தது. நாகை மாவட்டத்தில் அதிகபட்சமாக 36 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சிதம்பரம் 34 செமீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை 26 செமீ, குறிஞ்சிப்பாடி 25 செமீ, திருத்துறைப்பூண்டி 22 செமீ, சீர்காழி மற்றும் நாகையில் 21 செமீ, ராமேஸ்வரத்தில் 20 செமீ மழை பெய்துள்ளது.