தமிழகத்தில் கடந்த 15 வருடங்களில் அரசு பள்ளிகள் மூடப்படுவது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின் படி தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவாரூர்-2, நாட்றம்பள்ளி-1, தேவக்கோட்டை -4, தட்டால கொளத்தூர்-1, திருவள்ளூர்-1, பர்கூர்-1, தாராபுரம்-1, புள்ளம்பாடி-1, மயிலாடுதுறை-1, ஆரணி-1, கெலமங்கலம்-1, திண்டுக்கல்-4, லால்குடி -2, தர்மபுரி-1, திருவண்ணாமலை-1, திருப்பூர் -5, வேலூர்-2, நீலகிரி-5, தேனி -5 என அரசு பள்ளிகள் மூடப்பட்டிருக்கிறது.
மேலும் 669 தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரக் கூடிய விவரங்களும் வெளியாகி இருக்கிறது. தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து மாணவர்கள் அரசு பள்ளிகளில் இருந்து வெளியேறி இருப்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் புள்ளி விவரங்கள் எடுத்துரைக்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மாணவர் மதிப்பெண் குறைவாக பெறுவது, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்துதாதது போன்ற பல்வேறு காரணங்கள் அரசு பள்ளிகள் மூடுவதற்கான காரணிகளாக அமைந்துள்ளது. வரக்கூடிய வருடங்களிலும் அரசு பள்ளிகள் முழுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் நமக்கு
சுட்டிக்காட்டுகின்றனர். அரசு பள்ளிகள் மூடப்படுவது என்பது திமுக அதிமுக என இரண்டு கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றுள்ளது.
இது பற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் கேட்டபோது மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக அரசு பள்ளிகள் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளதாகவும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை கட்டாயம் ஏற்படுத்த முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் மூலம் உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாகவும் பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.