சட்டமன்ற தேர்தலின்போது கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகளை அரசு தற்போது செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்வதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சலுகை யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என அரசு குறிப்பிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு வங்கியில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
அதன்படி, தமிழக அரசின் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், ஒன்று அல்லது பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் 40 கிராமுக்கு உட்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொது நகைக்கடன்களை பெற்றிருந்தால் மற்ற தகுதிகளுக்கு உட்பட்டு அந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.
ஒரு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்கள், 31.03.2021 வரையில் ஒரு பவுனுக்கு அதிகமாக இல்லாத நகைகளுக்கு பெற்ற நகைக்கடன்களில் பகுதியாக செலுத்தியது போக அரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை நிலுவையில் உள்ள பொதுக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். மேலும் பொது நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கு இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2021 தேதி வரை பெற்ற நகைக்கடன்களில் பகுதியாக செலுத்தியது போக மீதமிருக்கும் நிலுவைத்தொகை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தொடர்ந்து 31.03.2021 தேதி வரை நகைக்கடன் கணக்கில் நிலுவை இருந்து, அரசாணை வெளியிடப்படும் நாள் வரையும் கடன் தொகை பகுதியாக செலுத்தப்பட்டிருந்தால் அந்த தொகை நீங்கலாக மீதமிருக்கும் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். அதுவும் இந்த பட்டியலில் இருக்கும் மற்ற தகுதிகளை உடையவர்களது கடன் தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். ஆதார் அடிப்படையில், குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தகுதிக்குட்பட்டு தள்ளுபடி செய்யப்படும்.