கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னப்பண்டாரங்குப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு சின்னபண்டாரங்குப்பம், செம்பளக்குறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த கூட்டுறவு வேளாண் சங்கம் வாயிலாக மானிய விலையில் உரம், யூரியா, பூச்சி மருந்து மற்றும் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், விவசாயிகளுக்கான பயிர்க்கடன், கரும்பு கடன், விவசாய உபகரணங்கள், நகைக்கடன் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலின்போது திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதி அறிவிப்பின் அடிப்படையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த விவசாயிகளின் நகைக்கடன் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை அடகு வைத்த பயனாளிகளுக்குத் திரும்ப நகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பணிகளில் பங்கேற்றுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் போன்றோர் பயனாளிகளிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு 1,000 ரூபாய் லஞ்சம், பயிர்க் கடன் தள்ளுபடிக்கு 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம், பயிர் கடன் தள்ளுபடிக்கு மூட்டைக்கு 100 ரூபாய் லஞ்சம் என வசூலித்து வருவதாக விருத்தாசலம் அருகேயுள்ள சின்னபண்டாரங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் மீது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்குப் பல முறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இதனால் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி போஸ்டர் வாயிலாக தங்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். அதன்படி விருத்தாசலம், மங்கலம்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் “தமிழ்நாடு முதல்வர் அறிவித்த நகைக்கடனை தள்ளுபடி செய்ய 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு தள்ளுபடி செய்து வருகின்றனர். அதேபோன்று பயிர் கடனுக்கு 3,000 ரூபாய், உரம் வழங்க மூட்டைக்கு 100 ரூபாய் என லஞ்சம் வசூலித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் சென்ற 3 வருடத்திற்கு முன் மாடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு, கடந்த 2 வருடத்திற்கு முன்பு வட்டி செலுத்தாத நகைக்கடன்களுக்கு நகைகளை ஏலம் விடுவதில் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.