தமிழக கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் சென்ற 2021 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதியளித்தார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் நிதி நெருக்கடி நிலையால் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நிபந்தனைகளின்படி நகைக்கடன் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டு 5 சவரன் அளவுள்ள நகைகளை வைத்து கடன் பெற்றவர்களிடம் விபரங்கள் சேகரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.
இந்த விபரங்களை அடிப்படையாக வைத்து கடன் தள்ளுபடி பெற தகுதியானோர் மற்றும் தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தகுதியற்றோர் பட்டியலில் இருந்தனர். இதன் காரணமாக நிபந்தனைகள் இன்றி அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நகைக்கடன் பெற தகுதி பெற்றவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணிகள் துவங்கியது. இதில் தகுதி இருந்தோர் பலர் தள்ளுபடி பட்டியலில் இல்லை என்று புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தகுதி இருந்தும் இடம் பெறாதவர்கள் மனு அளிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த மாவட்டத்தில் 181கூட்டுறவு நிறுவனங்களில் 29,994 பயனாளிகளுக்கு ரூபாய் 116.10 கோடி மதிப்பிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நபர்களுக்கு நகை மற்றும் சான்றிதழ்களை ஒப்படைக்கும் பணிகள் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் நடந்து வருகிறது. அப்போது நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தகுதிஇருந்தும் இடம் பெறாதவர்கள், தங்கள் பகுதியை சார்ந்த கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளரிடம் மனு கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.