தமிழகத்தில் வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஏப்ரல் 4) தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இணையவழி இலவச பட்டாக்களை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு இணையவழி இலவச பட்டாக்களை வழங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த காலங்களில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் தனி நபர்களிடம் இருந்து, ஏற்கனவே நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் என ஆயிரக்கணக்கானவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டிருந்தது.
மேலும் அவ்விவரங்கள் கிராம வருவாய் ஆவணங்களில் முறையாக பதிவு செய்யப்படாததால், அப்பயனாளிகள் தங்களது நிலங்களுக்கான நில உரிமைகளை பெற முடியாத சூழல் இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி, இந்த பயனாளிகளின் விவரங்களை தமிழ்நில இணைய ஆவணங்களில் பதிவு செய்து, இணைய வழி பட்டா வழங்கும் சிறப்பு நடவடிக்கையானது அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து புதிய பயனாளிகளை, கண்டறியும் பணி தொடங்கி, ஆய்வு செய்து வருகிறது. மேலும் மார்ச் 31 வரை மொத்தம் 43,911 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2022- 23 ஆம் ஆண்டு நிதியாண்டில் முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி, மீதமுள்ள 2,33,552 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.