தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக நர்சரி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்தியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நர்சரி பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.நர்சரி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இல்லாத மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன.எனவே அந்த மாவட்ட பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி போட்றா வகுப்புகளுக்கும் ஆங்கில வழி பாடப் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையை முடித்து தயார் நிலையில் வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்குவது பற்றி தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஆலோசனை நடைபெற்றுள்ளது.அதில் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டால் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. எனவே வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நர்சரி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.