தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அக்டோபர் 12 ஆம் தேதி பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகள், இருக்கைகள் போன்றவற்றின் விவரங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் அறிவுறுத்தியுள்ளது.