தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவை ஏற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முதன்முறையாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நவம்பர் 18-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பான இடைவெளியுடன் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் இணையத்தளம் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக கலந்தாய்வு தேதி நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கலந்தாய்வில் மாணவருடன் பங்கேற்பதற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.