தமிழகத்தில் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று தினங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அதற்கு அடுத்து வரக்கூடிய 3 தினங்களில் குறிப்பாக 20, 21 22 ஆகிய தினங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நகரக்கூடும் எனவும், இதன் காரணமாக 18 மற்றும் 19ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல 20ஆம் தேதிக்கான முன்னறிவிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
21 ஆம் தேதி வானிலை முன்னறிவிப்பில் தமிழகத்தில் வட தமிழக மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருவள்ளூர் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 22 ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழையும், வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை நேரத்தில் பனி ஒரு சில இடங்களில் படர்ந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென்கிழக்கு வங்க கடல், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடற்பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய கடலோர எல்லைப்பகுதி என பல்வேறு கடலோரப் பகுதியில் சூரை காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் தெற்கு ஆந்திரா, தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.