தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் விண்ணப்ப படிவங்களை நேரில் அளிப்பதற்கான நடைமுறை நாளையுடன் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் நடக்கும் இடங்களுக்குச் சென்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் முகவரி மாற்ற விரும்புவோர் அனைவரும் அங்கேயே விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் விண்ணப்ப படிவங்களை நேரில் அழிப்பதற்கான நடைமுறை நாளையுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தேர்தல் ஆணையத்தின் nsvp.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்யலாம். மேலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு மனுக்களை பதிவேற்றினால், அவை பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.