வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்க கடலில் நாளை டிசம்பர் 12ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி 14ஆம் தேதி தீவிரம் அடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் புயல் நேற்றோடு கரையை கடந்திருந்தாலும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மலையின் தீவிரத்தைப் பொறுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.