பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் பொருட்களின் விலை அதிகரித்ததால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வருகிற ஜூன் 13-ஆம் தேதி அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் ஸ்டேஷனரி கடைகளில் இன்றும், நாளையும் வியாபாரம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்டேஷனரி கடைகளின் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அதாவது அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதை தவிர மாணவர்களுக்கு தேவைப்படும் நோட்டுகள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு பெற்றோர்கள் ஸ்டேஷனரி கடைகளையே பெரும்பாலும் நாடுகின்றனர்.
இவைகளுக்கு தற்போது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதால் நோட்டுகள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கிறது. இதில் உதாரணமாக ஒரு நோட்டின் விலை 28 ரூபாய் முதல் 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 36 ரூபாய் மற்றும் 38 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. அதன்பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பேக் வழங்கப்பட இருப்பதால், பெற்றோர்கள் பேக் வாங்குவதில் அதிக அளவில் ஆர்வம் செலுத்தவில்லை. மேலும் மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.