பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு கேரள மாநிலத்திலுள்ள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி கொண்டு வருவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள்தான் அதிகளவில் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மாசி மாத விழாவின்போது இந்த கோவிலுக்கு 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று நேத்திக்கடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மாசி மாதம் விழாவின்போது பக்தர்கள் கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டு கொண்டிருக்கின்றனர். மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு வழிபாடும் செய்யப்படுகிறது. வருடந்தோறும் இந்த கோவிலின் மாசி மாத திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 2 வருடங்களாகவே கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 27 ஆம் தேதியில் இருந்து கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இத்திருவிழாவின் முக்கியமான நிகழ்ச்சியான மாசி கொடை திருவிழா நாளை (மார்ச்.8) நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழக அரசின் தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் மட்டும் தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.