தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மீண்டும் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை முதல் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.