திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் குமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான பதிவு துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 2 மாதங்களாக ஆய்வுகள் நடத்தப்பட்டு அது சம்பந்தமான அறிக்கைகள் துறைச் செயலாளர் மற்றும் பதிவுத்துறை தலைவர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதல் போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கு அந்தந்த தாலுகாக்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் புதிய நடவடிக்கைகள் கொண்டுவரப்படும். தமிழகத்தில் போலி பத்திர பதிவுகளை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளதோடு, 2000 பத்திரங்களின் மீது விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக பத்திர பதிவுத்துறையில் கடந்த 8 மாதத்தில் 24,500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த துறையில் இன்னும் கூடுதல் வருவாயை ஈட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் பத்திரப்பதிவு கட்டணத்தை கூட்டம் எண்ணம் அரசுக்கு கிடையாது. ஒருவேளை தேவைப்பட்டால் முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும். மேலும் வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறையில் 39 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வணிகர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.