தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ரேஷ்மாவும் மாணிக்கராஜ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் காதலர்கள் இருவரும் ஊரை விட்டு தலைமறைவாகினர். பின்னர் கடந்த ஜூன் 29ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வந்தனர்.
ஊருக்கு திரும்ப நினைத்திருந்த காதல் ஜோடியிடம் இங்கு நிலைமை சரியில்லை தற்போது ஊருக்கு வர வேண்டாம் என உறவினர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் காதல் தம்பதி கடந்த வாரம் ஊருக்கு வந்து மாணிக்க ராஜனின் தாயார் பேச்சியம்மாளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் காலை வீட்டிற்குள் புகுந்த பெண்ணின் தந்தை முத்து குட்டி காதல் தம்பதியை வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முத்து குட்டியை தேடி வருகின்றனர்.காதல் திருமணம் செய்த மகள் மற்றும் மருமகனை திருமணம் செய்த 26 வது நாளிலேயே தந்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.