தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் காலையில் கடும் பனிப்பொழிவும், பனிமூட்டமும் காணப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது . சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டது.
கோவில் நகரமான கும்பகோணத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. மிக உயர்ந்த கோபுரங்களான சாரங்க பாணி சுவாமி ஆலயத்தில் கோபுரம், கும்பீஸ்வரர் ஆலையத்தின் கோபுரம் ஆகியவற்றை பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது . கோவை , திருச்சி , மதுரை உட்பட தமிழகம் முழுவதும் பனிமூட்டம் காணப்பட்டது.
பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இரவு வேளையில் தொடங்கும் பனிப்பொழிவு அதிகாலை வரைக்கும் நீடிக்கிறது. இதனிடையே மேலும் சில நாட்களுக்கு பணியின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .