தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9- 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.முத்துவேல், மாவட்ட பொருளாளர் கே.கருணா காளிதாஸ், மாநில தலைவர் கி.மகேந்திரன், மாநில பொருளாளர் அ.ஜான் உபால்ட், மாநில துணைத் தலைவர் எஸ்.சந்தானகிருஷ்ணன் மற்றும் மாநில செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பள்ளி வேலை நாட்கள் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கவேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வு ஆகியவற்றை உடனே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளின் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.