தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதால் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குகிறது. இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது என இன்று முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உடன் கலந்து ஆலோசிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.கத்திரி வெயில் இன்று தொடங்கும் நிலையில் கோடை விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு மதியம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.