தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழல் தற்போதைக்கு கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், “கொரோனா தடுப்பு பணியில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் மிக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு கிடையாது. கொரோனாவின் பாதிப்பு குறைந்த பிறகுதான் பள்ளிகள் திறப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்.மேலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற கூடிய பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் அனைத்தும் கூடுதலாகவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வருடம் அரசு பள்ளிகளில் புதிதாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆண்டுதோறும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக சற்று தாமதம் ஆகியுள்ளது. தமிழகத்தில் மலை கிராமங்கள் உள்ளிட்ட 52 பின்தங்கிய கிராமங்களில் சரியான இணையதள சிக்னல் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று அவர் கூறியுள்ளார்.