தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் பொது தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கும் மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு தாமதமாவதால் பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். மேலும் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளை நோக்கி வந்துள்ள மாணவர்களை தக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.