தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் தடுப்பூசிகளை இரண்டாம் தவணை போட்டுக் கொள்பவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவதற்கும் முன்னுரிமை தரவேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
அதற்காக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். விரைவில் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.