தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . பின்னர் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு, பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் இருக்கும் காரணத்தினால் ஜூன் மாத இறுதியில் பள்ளிகள் திறப்பு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
அதுதவிர அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அமலுக்கு கொண்டுவர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளி போகலாம் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜூன் நான்காவது வாரத்தில் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.