Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை”…. பள்ளிக்கல்வித்துறை அளித்த விளக்கம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேசமயம் அரசு ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதனையும் மீறி வேலைநிறுத்தத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்துனர்களும், பல ஓட்டுநர்களும் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் நேற்று 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதனால் போதிய அளவு பேருந்து கிடைக்காததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை, பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதாலும், போதியளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாலும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விளக்கமளித்துள்ளது.

Categories

Tech |