தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 1-8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு கற்றலில் இடைவெளி ஏற்பட்டுள்ளதால் 3, 5 , மற்றும் 8 ஆம் வகுப்பு ஆகிய மாணவர்களுக்கு வினாடி வினா நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வினாடி வினாடி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட அரசு முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு அந்த பாட ஆசிரியர்கள் வினாடி வினாத் தொகுப்பை மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்து பயிற்சி அளிக்க வேண்டும்.
மேலும் மாணவர்களிடம் வினாடி வினா குறித்து கலந்துரையாடி அதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதைக் கேட்டு அந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டும். மேலும் ஆசிரியர்கள் அதற்கான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு முறையாக வழங்கவதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.