மாநில அரசை பரிந்துரை செய்யாமல் தானாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரரான முத்தரசன், இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், இந்த ஆண்டு அதனை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இது ஓபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு செய்துள்ள மன்னிக்க முடியாத துரோகம். மேலும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, அதனை ஆளுநருக்கு தெரிவித்தது.
ஆனால் அவரிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு பதிலும் வரவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தையும் விரைவில் கூட்டி, பிரதமரை சந்தித்து உள் ஒதுக்கீடு மசோதாவை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அமைச்சரவை நிறைவேற்றும் எந்தவொரு தீர்மானத்தையும் ஆளுநர் ஏற்றுக்கொள்வதில்லை. இது தமிழக அரசை அவமதித்த கூடியதாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா சூரத் தனமாக தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மாநில அரசை பரிந்துரை செய்யாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பழனிசாமி ஆட்சியா? சூரப்பா ஆட்சியா? என்று கேள்வி எழுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.