இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பழைய பென்ஷன் திட்டம் அமலாகும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மிக முக்கியமான ஒன்று பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள cps எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை என்றும் இதில் இழப்புகள் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தேர்தலின் போது திமுக பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இதுநாள் வரை இந்தத் திட்டத்தை அமல் படுத்தவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது அதற்கு அதிக செலவாகும் என்பதாலும், இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்றும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கட்டாயம் செயல்படுவதாக கூறி ஆட்சிக்கு வந்து விட்டு தற்போது நிதி பற்றாக்குறை என்று காரணம் காட்டி மறுப்பது சரியில்லை என்று cps ஒழிப்பு அமைப்பினர் கூறுகின்றனர். பொதுமக்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசு ஊழியர்களின் குறைகளை தீர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று cps ஒழிப்பு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநில முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்களித்தார், அதன்படியே இப்போது அமல் படுத்திவிட்டார். மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் ஏன் இன்னும் மெளனம் சாதிக்கிறார் என்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அதில் பிரச்சினைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுகள் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்தால் நிதி ரீதியாக பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.