மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ஆதார் அட்டை இந்தியாவின் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மேலும் மாநில, மத்திய அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு இந்த ஆதார் கார்டு அவசியம். எனவே பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் அமைச்சகத்தால் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது அதில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வது அவசியமாகும். மேலும் பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலமாகவே மாற்றம் செய்துகொள்ளலாம்.
அதேபோல் ஆதார் கார்டில் சுய விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந்தால் UIDAI அமைப்பு அதனை மாற்றும் வசதியை வழங்குகிறது. புகைப்படம், கைரேகை உள்ளிட்டவற்றை மாற்ற கட்டாயம் ஆதார் சேவை மையம் செல்லவேண்டியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இந்திய அஞ்சல் துறை சார்பாக சிறப்பு ஆதார் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் புதிதாக ஆதாா் எடுப்பதற்கு கட்டணம் கிடையாது. அதேபோல் ஆதாா் திருத்தம் செய்ய ரூ. 50 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். அதோடு மட்டுமில்லாமல் ஆதாா் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், செல்லிடப்பேசி எண் சேர்த்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும்.
இந்த சேவையைப் பெறுவதற்கு வாக்காளா் அடையாள அட்டை, பள்ளி அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், பான்காா்டு, பாஸ்போா்ட், ஓட்டுநா் உரிமம் உள்ளிடவற்றின் அசல் ஆவணத்தைக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பான மேலும் தகவலுக்கு அருகில் உள்ள அஞ்சல் ஆதாா் சேவை மையம் மற்றும் அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம் என்று அஞ்சல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.