தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெயரளவுக்கு மட்டுமே பாடங்களை நடத்தி விட்டு மாணவர்களை பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு தயார் செய்கின்றனர். ஆனால் உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ்-1 பாடங்களில் இருந்து அதிக அளவு கேள்விகள் கேட்கப்பட்டன. அதனால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதுதவிர தனியார் பள்ளிகள் இடையே நிலவும் போட்டி மனப்பான்மை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனை கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை 2018 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்த தேர்வு மதிப்பெண்களை 1200-ல் இருந்து 600 ஆக குறைத்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டது.
ஆனால் அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் உயர் கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. மதிப்பெண் சான்றிதழ் தனியாக வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை போல பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொது தேர்வு நடைமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரி கூறுகையில், 10, 11, 12ஆம் வகுப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனைத் தவிர நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் போதுமான அவகாசம் கிடைப்பதில்லை. தமிழகத்தை தவிர பிற மாநில கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை.
அதனால் பல்வேறு காரணங்களால் பள்ளி மாறும்போது மாணவர் சேர்க்கையிலும் குழப்பங்கள் நிலவுகின்றன. இதனை கருத்தில் கொண்டு நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.பொதுத்தேர்வை ரத்து செய்தாலும் தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தைத் தவிர்க்க மாவட்ட அளவிலான தேர்வை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரையை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.