தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் உடனான கலந்துரையாடலுக்கு பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்வு நடத்தவில்லை எனில் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு அல்லது மத்திய கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே பிளஸ் 2 தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.