தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த கருத்துகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கும், 14417என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக இறுதி முடிவெடுக்க பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில் இன்று அல்லது நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.