தமிழ்நாட்டில் தினசரி மின் தேவை 17,000 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இது 18,000 மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும். இதனால் மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 2.29 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 34 லட்சம் வரை வர்த்தக இணைப்புகளும், 7.50 லட்சம் தொழிற்சாலைகளுக்கு குறைந்தழுத்த மின் இணைப்புகளும் இருக்கின்றன.
மின் உற்பத்திக்கான நிலக்கரி தேவையை பொறுத்தவரையிலும் 72 ஆயிரம் டன் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. எனினும் மத்திய அரசு சுரங்கங்களிலிருந்து 50 ஆயிரம் டன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக 2 மாதத்திற்கு தேவையான 5 லட்சம் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. இதன் வாயிலாக 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
இதனைத் தவிர்த்து நடுத்தர காலபடி 650 மெகாவாட் மின்சாரம் மற்றும் குறுகியகால அடிப்படையில் 750 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகத்திடமிருந்து 550 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆகவே தினசரி மின் தேவையானது 18,000 மெகாவாட் அளவைஎட்டினாலும், மின் தட்டுப்பாடின்றி எளிதில் பூர்த்தி செய்ய இயலும்.