மாநிலங்களுக்கு இடையிலான விமான சேவை கட்டுப்பாடுகளை தளர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முதல் கட்டமாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையிலான விமான சேவை கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இனி நாளொன்றுக்கு 150 விமானங்கள் தரையிறங்க அரசு அனுமதித்துள்ளது. தமிழகத்துக்குள் நாள்தோறும் 50 விமான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்கு உள்ளேயும் இயக்கப்படும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.