தமிழகத்தில் பேனர்களை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் பேனர்களை வைத்த போது மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பேனர் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விழுப்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்..
இந்த வழக்கு சென்னை தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பேனர் வைக்க ஒப்பந்தம் பெற்றிருந்த கான்ட்ராக்டர் தான் சிறுவனை பணியில் அமர்த்தினார்.. அந்த கான்ட்ராக்டர் கைதாகியுள்ளார்.. சிறுவன் குடும்பத்திற்கு தற்காலிகமாக 1 லட்சம் இழப்பீடு தரப்பட்டுள்ளது. மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே கட்சியினர் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.. பேனர் வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்று கூறப்பட்டது..
பின்னர் நீதிமன்றம் தமிழகத்தில் பேனர்களை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.. அனுமதியின்றி பேனர் வைக்க யாருக்கும் உரிமை இல்லை.. பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக பதிலளிக்க வேண்டும் என்று கூறியதுடன் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.