தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். வீடுகளிலேயே தனிமைப்படுத்தி உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்துதல் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களுக்குப் பல்ஸ் ஆக்சி மீட்டர் தரப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மூன்றாவது அலையை பொருத்தவரை தீவிர சிகிச்சை என்பது குறைவாகவே இருக்கும்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.