சென்ற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இவற்றில் பல முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி திருவள்ளூரை சேர்ந்த ஜெயக்கோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், அரசுவழங்கிய பொங்கல் தொகுப்பிலிருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாகவும், இறந்த பூச்சிகள் காணபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தரமற்ற பொருட்கள் வழங்கியதன் வாயிலாக மக்கள் பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வருக்கு புகார் அளித்ததாகவும், அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தரம் அற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அதை தடுக்காத உணவுத்துறை அமைச்சர்சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி போன்றோருக்கு எதிராக லோக் ஆயூக்தா அமைப்பில் புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளபடவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர் மனுதாரராகவுள்ள அந்த இரு அமைச்சர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியது. எனினும் அமைச்சராக இருப்பதால் இருவரும் இதுவரையிலும் பதில் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். அதன்பின் அமைச்சர்கள் இருவரையும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.