தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களில் 9% பேர் போதைபொருள் பழக்கத்துக்கு அடிமையாவதாக ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் THE INSTITUTE OF SOCIAL EDUCATION என்ற தனியார் அமைப்பு தமிழகத்தின் சென்னை, திருவண்ணாமலை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் பதின்பருவ பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது.
அதில் 168 பள்ளிகளில் 3,021 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9% பேர் தாங்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர். மது குடித்தல், கஞ்சா, போதை பாக்கு, புகையிலை, சிகெரட் என பலவகை போதை பொருள்களை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும், ஏழாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் வளர் இளம்பருவத்தினரிடையே தான் இப்பழக்கம் அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிகிறது.
போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களில், போதைக்காக 26% பேர் ஆல்கஹாலும், 23% பேர் கூல் லிப் பொருள்களையும், 22% பேர் புகையிலை பொருள்களையும் பயன்படுத்துகின்றனர். அதேபோல், ஒய்ட்னர், ரப்பர் போன்ற பொருள்களை 13% பேர் போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். இதை தவிர்த்து, கஞ்சாவை 10 சதவிகிதத்தினரும் பிற வகையான போதைப் பொருள்களை 6 சதவிகித மாணவர்களும் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
பள்ளியில் படிக்கும் சீனியர் மாணவர்களைப் பார்த்து சிறுவர்கள் இப்பழக்கதுக்கு ஈர்க்கப்படுவதும், பள்ளிகளுக்கு அருகிலேயே இருக்கும் சிறிய பெட்டிக்கடைகளில் போதைப் பாக்கு, புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் மிக எளிதாக கிடைப்பதும் தான் மாணவர்கள் தடம் மாற முக்கியக் காரணமாக உள்ளது. தற்போது பொதுமுடக்கம் அமலில் இருக்கும் சூழலில் ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகு போதை பொருள்கள் கஞ்சா புகையிலை குறித்து இணையத்தில் தேடுவதும், அவை குறித்த பாடல்களை பார்ப்பதும் அதிகமாகியுள்ளதாம்.
போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்ளும் மாணவர்களை அதிலிருந்து மீட்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மன ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து மீள உதவவும் பள்ளிகளில் மட்டுமல்லாது, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பளர்களை நியமிப்பது கட்டாயம் ஆகும். பிள்ளைகள் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய முதல் கடமை பெற்றோருக்குத் தான் உள்ளது.